Sunday, February 20, 2011

'நிஜவேர்'களைத் தேடும் 'சாஃப்ட்வேர்'...



"இன்னிக்கு எல்லாருக்கும் நல்ல கல்வி கிடைக்குது. திறமை இருக்கறவங்களுக்கு கை நிறைய சம்பளத்துல வேலை கிடைக்குது. கணினிக்கு வாக்கப்படறதுக்கு பலனா... வீடு, கார்னு விரும்பின வாழ்க்கை கிடைக்குது. நல்ல விஷயம்தான். ஆனா, இப்படி எல்லோருமே 'வொயிட் காலர் ஜாப்'ங்கறத நோக்கியே போயிட்டா, உயிராதாரமா இருக்கற உணவுப் பொருள்கள யார்தான் உற்பத்தி செய்றது..?"

- முக்கியமான கேள்வியுடன் ஆரம்பிக்கும் பிரதீபா நக்வார், இன்று ஒரு இயற்கை விவசாயி; ஆறு ஆண்டுகளுக்கு முன்... சாஃப்ட்வேர் இன்ஜினீயர்!




கர்நாடகா மாநிலம், நக்வார் என்ற கிராமத்தைச் சேர்ந்த சௌபாக்கியதேவி- ரங்கய்யா தம்பதியின் மகள் பிரதீபா. பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு, அமெரிக்காவில் பெரிய நிறுவனம் ஒன்றில் ஒன்பது ஆண்டுகள் பணி... அதே நிறுவனத்துக்காக லண்டனில் இரண்டு ஆண்டுகள் பணி என பதினோரு ஆண்டுகள் கை நிறைந்த சம்பளத்துடன் உயர்ந்த பொறுப்பை நோக்கி விரைந்து கொண்டிருந்தவர்.

எங்கு, எப்படி நிகழ்ந்தது இந்த கணினி டு கழனி மாற்றம்?

"சாஃப்ட்வேர் துறையில வேலை பார்த்தப்போ, நான் சந்திச்ச பலர், விவசாயக் குடும்பங்கள்ல பிறந்து, படிச்சு, பெரிய பணிகளுக்கு வந்தவங்களா இருந்தாங்க. 'ஊர்ல எப்படி இருக்கு உங்க விவசாயம்?'னு அவங்ககிட்ட ஆர்வமா கேட்பேன்.

'இனியும் அது எதுக்கு எங்களுக்கு? அப்பா, அம்மாவை சிட்டிக்கு கூட்டிட்டு வந்துட்டேன். தாத்தா, பாட்டி இருக்கறவரைக்கும் அவங்களால முடிஞ்சத பார்ப்பாங்க. அப்பறம், அவ்வளவுதான்! கிட்டத்தட்ட, எங்க ஊருல இருக்கற எல்லா விவசாய நெலத்தோட நிலைமையும் இதுதான்!'னு காலம் காலமா அவங்கள காப்பாத்தின, உலகத்து பசியையெல்லாம் ஆத்திட்டு வந்த, பாரம்பரிய தொழிலோட ஆயுள் முடியப்போறதைப் பத்தின எந்த வருத்தமும் இல்லாம சொல்லுவாங்க. ஆனா, அதை என்னால சுலபமா கடந்து போக முடியல.

'இந்தத் தலைமுறையும், இனி வரும் தலைமுறையும் இப்படி விவசாயத்தில் இருந்து விலகிட்டா, அப்பறம் உணவுங்கறது எங்கிருந்து கிடைக்கும்?'னு எனக்குள்ள எழுந்த கேள்வி, என்னை பல இரவுகள் தூங்க விடல. அதுக்காக இயக்கத்துல சேரவோ, கட்டுரைகள் எழுதவோ, பிரசாரத்துல கலந்துக்கவோ எனக்கு விருப்பமில்ல.

'நாம விரும்பற மாற்றத்துக்கான முதல் புள்ளியா, நாமளே இருப்போம்!'னு இறுதியா, உறுதியா முடிவெடுத்து, வேலையை விட்டுட்டு விவசாயத்துல இறங்கினேன். என்னை நோக்கி வந்த அதிர்ச்சிப் பார்வைகள், கேலிப்பேச்சுகள், அறிவுரைகள் எல்லாம் ஒரு கட்டத்துல அதுவா விலகிடுச்சு. இப்போ இந்த பிரதீபா 11 ஏக்கர் நிலத்துல... நெல், காய், கனி, பயறுனு விளைவிக்கற ஒரு விவசாயி!" என்று சொல்லும் பிரதீபாவின் தீர்க்கமான பார்வையும், அதை அவர் அடைந்த தெளிவும், அவர் மீது மரியாதையைக் கூட்டுகின்றன.




பெங்களூருவில் இருந்து கனக்புரா செல்லும் வழியில், முப்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்தால்... கபாடி எனும் கிராமம். அங்கிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில்... ஆள் அரவம் இல்லாத சூழலில்... சுற்றிலும் சூரிய மின்வேலியுடன் கிடக்கிறது பிரதீபாவின் பண்ணை. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் கரடு முரடாக இருந்த இந்த நிலத்தை தன் கடும் உழைப்பால் சொர்க்கபூமியாக மாற்றிக் கொண்டிருக்கிறார். ரசாயனங்களை தன் நிலத்துப் பக்கம் அனுமதிப்பதே கிடையாது பிரதீபா. தன் பண்ணையில் 13 மாடுகளையும் வளர்த்து பராமரித்து வருகிறார். "ராத்திரியாயிட்டா... அந்த 13 மாடுகளும், நாலு குழந்தைங்களும்தான் (நாய்களை இப்படித்தான் சொல்கிறார்) எனக்குத் துணை" என்று சொல்லும் பிரதிபா, தனியருவராகத்தான் வாழ்ந்து வருகிறார்!

"ஆரம்பத்துல, 'கீ போர்டு தட்டற வேலையில்லம்மா இது'னு சிரிச்சவங்க பலர். ஆனா, ஏர் கலப்பை, டிராக்டர், களையெடுக்கற கருவி, விதை விதைக்கற கருவி, மாட்டு வண்டினு எல்லாமே இப்போ என் கைக்கு பழகிடுச்சு. ஹைபிரீடு ரகங்களைத் தவிர்த்துட்டு, பாரம்பரிய நெல் ரகங்களை மட்டுமே விவசாயம் பண்றேன். மா, பப்பாளி, வாழை, பாக்கு, தேக்கு, சவுக்கு, மாதுளை, நெல்லி, கொய்யா, முருங்கைனு பலவகைப் பயிர்களும் என் தோட்டத்துல விளையுது" என்று சந்தோஷமாகச் சொல்லும் பிரதீபாவின் ஈடுபாடு, நமக்கு ஆச்சர்யம் தருகிறது.

"வேலைக்குப் போறவங்களோட மாசச் சம்பளம் போல ஒரே மாதிரியான நிரந்தர வருமானம் இருக்காது விவசாயத்துல. ஆனா, அந்த சூழலை பழகிகிட்ட எளிமைவாதிகள் விவசாயிகள். அந்த மனநிலையை நாமளும் ஏற்படுத்திக்கிட்டா, படிச்சவங்களும் மனநிறைவோடு விவசாயம் செய்யலாம்!" என்பவர்,

"என்னைப் பத்தி பத்திரிக்கையில செய்தி வந்தா... சில நாட்களுக்கு போன்ல விசாரிப்பாங்ல, பாராட்டுவாங்க. அதைத்தாண்டி பட்டதாரிகள் மத்தியில 'விவசாயத்தை நோக்கி' ஏதாவது மாற்றம் நிகழ்ந்தா, அதுதான் என் சந்தோஷம்!"

- நல்ல செய்திக்காக காத்திருக்கிறார் பிரதீபா!

நன்றி: (அவள் விகடன் 05-11-2010 )

1 comment: