Monday, March 21, 2011
Thursday, March 10, 2011
தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்!
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்."இலங்கைப் பிரச்னைக்காக இங்குள்ள தமிழர் ஒன்றாதல் வேண்டும் என்று சொன்ன உங்களைப் பாராட்டுகிறேன். எல்லோரையும் ஒன்றாகச் சொல்லிவிட்டு நீங்களே பிரிந்தது ஏன்?
இன்னும் உங்களுக்கு ஒரு ஓரத்தில் மனசாட்சி என்று ஒன்று சிறிதளவேணும் இருந்தால் நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.
ஏற்கனவே இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று ஒன்றைத் துவங்கியிருக்கிறார்கள். அதை ஏன் துவங்கினார்கள்? ஈழத் தமிழர்க்காக உங்கள் தலைமையில் போராடுகிறோம், வாருங்கள் என்று வருந்தி வருந்தி அழைத்தார்கள். உடனே என்னை முன்னிறுத்திப் போராடச் சொல்லி என் ஆட்சியைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள் என்றீர்கள். சரி இவரை நம்பினால் ஈழத் தமிழனுக்கு விமோசனம் கிடைக்காது என்று நம்பித்தான் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று ஒன்றைத் துவக்கினார்கள்.
அதிலும் குறிப்பாக ஏன் அப்படித் துவக்கினார்கள். இதில் பல்வேறு கட்சிகள் இருந்தாலும் தமிழர் என்ற ஒரு குடையின் கீழ் திரள வேண்டும் என்பதுதான் அதன் முதன்மையான நோக்கம். அப்படியே துவக்கினாலும் போராட்டத்துக்கு உங்களை விட்டுவிடாமல் உங்களுக்கும் முறையான அழைப்பை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அனுப்பினார்கள். ஆனால் நீங்களோ என்னை அழைக்கவில்லை என்று முழுப்பொய் சொன்னீர்கள். பழ.நெடுமாறன் உங்களுக்கு அனுப்பிய அழைப்பைச் செய்தியாளர்கள் முன்னிலையில் வாசித்துக்காட்டி உங்கள் பொய்யை வெளிச்சம் போட்டுக்காட்டினார்!
உடனே மருத்துவமனையிலிருந்த உங்களுக்கு இலங்கை தமிழர் நல உரிமைப் பாதுகாப்புப் பேரவை என்ற ஒன்றைத் துவக்கியதாக அறிவித்தீர்கள். இதன் மூலம் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் வேண்டும் என்ற உங்கள் வாய்மொழியையே பொய்மொழியாக்கிவிட்டீர்கள். அழைத்தவர்களை விட்டுவிட்டு அதிமுகவுக்கு அழைப்பு விடுகிறீர்கள். என்ன அய்யா, இது நியாயம்? இதுவெல்லாம் உங்களின் கைவந்த கலை என்பது எனக்கு நன்கு தெரியும்.
மருத்துவமனையிலிருந்துகொண்டே குடும்ப நலனை மட்டுமே முன்னிறுத்தி ஆட்சியாளர்களுக்கு உத்திரவு பிறப்பிக்கும் உங்களின் குடும்பப் பாசத்திற்கு ஒரு எடுத்துக்காட்டுதான், "அரசு கேபிள் நிறுவன" அதிகாரியான உமாசங்கரை பந்தாடும் உத்திரவு! பிழைக்கத் தெரியாத ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் ஜெயலலிதா ஆட்சியில் சுடுகாட்டுக் கூரை ஊழலை வெளிக்கொணர்ந்தார்!
உங்களாட்சியில் சுமங்கலி வட இணைப்பு நிறுவனத்தின் கருங்காலித்தனத்தை வெளிக்கொணர்ந்தார்! ஆட்டைக் கடிச்சு மாட்டைக்கடிச்சு என் குடும்பத்தையே கடிக்க வந்தாயா? என்று ஒரு நேர்மையான முதுகெலும்புள்ள ஒரு அதிகாரியை தூக்கி வீசி எறிந்திருக்கிறீர்கள். இதையெல்லாம் மக்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார்கள், முதல்வர் அவர்களே! இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை! ஈழத் தமிழரென்றாலும், அரசுக்கட்டிலானாலும் ஆஸ்பத்திரிக்கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாலும் உங்கள் சிந்தனை உங்கள் குடும்பத்தைச் சுற்றியே என்பது எனக்குத் தெரியாதா? தமிழகத்து மூலை முடுக்கெல்லாம் இருக்கும் மக்களுக்குத்தான் தெரியாதா?
இலங்கை தமிழர் நல உரிமைப் பாதுகாப்புப் பேரவை அமைத்துள்ள உங்களுக்கு இன்னொன்றைச் சுட்ட கடமைப்பட்டிருக்கிறேன். ஈழத் தமிழர்களுக்கு உங்களால் விடிவு ஏற்படப்போவதில்லை என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. ஏனென்றால் அன்பழகனார் இலங்கைப் பிரச்னையில் எங்களால் எதுவும் செய்ய இயலாது; தில்லியால் தான் இலங்கையைக் கட்டுப்படுத்த முடியும்; நாம் அவர்களுக்கு உணர்த்த மட்டும்தான் முடியும் என்று உங்கள் ஒட்டுமொத்த கையாலாகத் தனத்தை பேரவைக் கூட்டத்திலேயே சொல்லிவிட்ட பிறகு பேரவையின் இலட்சணத்தையும் அதன் நோக்கத்தையும் புரிந்து கொண்டேன்.
இலங்கைப் பிரச்னையில் நாடகமாடுவது யார்? என்று நீங்கள் ஜெயலலிதாவை நோக்கி விரல் நீட்டியிருக்கிறீர்கள்? உங்கள் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுக்கொண்டு ஜெயலலிதாவின் முதுகைப் பாருங்கள்.
இலங்கைத் தமிழர்களின் இன்னுயிர்காக்க தங்கள் இன்னுயிரை ஈகிவருவோர் மொழிப்போராட்டத்தை விட வலுவாக தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடந்துவருகிறது.
இந்திய அரசு திட்டவட்டமாக இப்போது கைவிரித்துவிட்டது? இனி என்ன செய்யப்போகிறீர்கள்?
இலங்கையரசு போரை நிறுத்தும் பேச்சே இல்லை என்று கொக்கரிக்கிறது
இன்னும் காங்கிரசை நம்பி நாடகமாடமுடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு உங்களைத் தள்ளிவிட்டுவிட்டது.
காலம்தாழ்ந்தாலும், நீங்கள் இந்த நெருக்கடியான நேரத்திலாவது ஒரு நல்ல முடிவை எடுப்பதற்கு இது மிகச் சரியான நேரம், முதல்வர் அவர்களே!
சரி விஷயத்துக்கு வருகிறேன். ஈழத் தமிழர்கள் என்றால்தான் தில்லியைக் கைகாட்டுகிறீர்கள்; ஈழத்திலிருந்து உங்களையே நம்பி வந்த இலங்கைத் தமிழர்களை அகதிகள் முகாமில் நீங்கள் எப்படி வைத்திருக்கிறீர்கள்?
தமிழகத்தை நம்பி வந்த ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் நடத்தப்படும் நிலை மிகக்கொடுமையானதாக இருக்கிறது. அகதிகளாய் இங்குவந்து, ஏன் வந்தோம் என்ற ஆறாத் துயரில் ஆழ்ந்திருப்போர் குறித்து ஏன் தெரிந்து கொள்ள வில்லை?
தமிழக அரசும் சரி, மத்திய அரசும் சரி ஈழத் தமிழர்களை மனித நேயத்தோடு அணுக மறுக்கிறது? ஏன்? குற்றுயிரும் குலையுயிருமாய் இங்கு வந்து, அந்தக் குண்டுகளுக்கே இரையாகியிருக்கலாமோ என்று எண்ணுகிற சூழலை உங்கள் அரசும், மத்திய அரசும் ஏற்படுத்தியுள்ளது வேதனை தரும் ஒன்று; நெஞ்சுள்ளோர் பதறிப்போவார். ஈழத் தமிழருக்கு இராசபக்சே எமன் என்றால் இங்கிருப்போருக்கு நீங்கள் சார்ந்த அரசும்,நடுவணரசும் கொடுந்தீங்கிழைக்கிறது.
இந்திய அரசு அகதிகளைக்கூட ஒரே மாதிரி நடத்த முன்வராமல் ஈழ அகதிக்கு ஒரு நீதியும், திபெத்திய அகதிக்கு ஒரு நீதியும் செய்யும் கொடுமையும் நீங்கள் அறிந்தே நடக்கிறதா? தெரிந்தும் தெரியாததுபோல இதிலும் நடுவணரசுக்கு துணைபோகிறீர்களா?
திபெத்திய அகதி முகாம் எப்படி இயங்குகிறது? ஈழத் தமிழர் அகதிகள் முகாம் எப்படி இயங்குகிறது? அவர்களுக்கு என்னவெல்லாம் இந்திய அரசு சலுகைகளைச் செய்கிறது? திபெத்திய முகாம் உள்ள கர்நாடகாவில் கர்நாடக அரசு செய்யும் உதவிகள் என்ன? ஈழத் தமிழர் முகாம்கள் உள்ள தமிழகத்தில் தமிழக அரசு செய்யும் உதவிகள் என்ன? இத்தனைக்கும் கர்நாடகத்திற்கும் திபெத்தியருக்கும் எந்த ஒட்டுறவும் கூட்டுறவும் கிடையாது. ஆனால் தமிழகத்தில் இரத்த சம்பந்தம் உள்ளவர்கள், தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்ற பந்தம் உள்ளவர்கள் ஈழத் தமிழருக்காக ஈழத் தமிழர் நல உரிமைப்பேரவை வடிப்பது கண்ணீரா? நீலிக்கண்ணீரா? என்பதை இந்த மடலின் முடிவில் தெரிந்துகொள்வீர்கள்!
இந்தியாவில் திபெத்திய அகதிகள் மற்றும் ஈழத்தமிழ் அகதிகள் பலர் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களுக்கு இந்திய அரசு செய்யும் உதவி(?)களை இங்கு பட்டியலிடுகிறேன். ஒட்டும் உறவும் இல்லாத கர்நாடக அரசு செய்து தந்திருக்கும் ஏற்பாடுகளையும் ஓய்வாக மருத்துவமனையின் மலர்படுக்கையிலிருந்தவாறே வசதியாகச் சாய்ந்து கொண்டு படித்துப்பாருங்கள்.
கர்நாடகாவிலுள்ள திபெத்திய அகதிகள் முகாமில் 5,232 அகதிகள் உள்ளனர்.
தாங்கள் விரும்பியது போல் வீடுகளைக் கட்டிக் கொள்ளுவதற்கு அனுமதி (அனைத்தும் மாடி வீடுகள் மற்றும் அவர்களின் கலாச்சாரப்படி கட்டப்பட்ட ஓட்டு வீடுகள்). தனியாக ஒவ்வொரு பகுதிக்கும் திபெத்தியர்களுக்கு 5 மருத்துவர்கள், 15 செவிலியர்களுடன் தரமான, நவீன வசதிகளுடன் தனி மருத்துவமனை; அவர்கள் தாங்களே வடிவமைத்துக் கொண்ட கழிப்பறை, குளியலறைகள்.
ஆனால் திபெத்திய அகதிகளுக்கோ தங்கள் புத்தமத கலாச்சாரத்தின்படி தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளவும், உடைகள் அணியவும், வீடுகளைக் கட்டிக் கொள்ளவும், தங்கள் மொழியை பாதுகாத்துக் கொள்ளவும், அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கின்றது. தனியாக நவீனமுறையில் வடிவமைக்கப்பட்ட புத்த கோயில் மற்றும் தலாய்லாமா கோயில்கள் 1 ஏக்கர் பரப்பளவில் கட்டித்தரப்பட்டுள்ளது.
தனியாக சுமார் ஐம்பது மாணவர் படிக்கக்கூடிய மதப்பள்ளி ஒன்றும்,அதே போல் மதக் கல்லூரி ஒன்றும்,தனித்தனியான மாணவர் விடுதிகள் உள்பட ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
சகல வசதிகளுடன் CBSC பாடத் திட்டத்தில் - தில்லி அரசாங்கத்தின் அனுமதி பெற்ற. திபெத்திய அகதிக் குழந்தைகளுக்கு மட்டுமான பள்ளி கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது பத்தாம் வகுப்பு வரை மட்டும்.
பின் 11, 12 வகுப்பு பயில அரசே அனைத்து செலவுகளையும் ஏற்று சிம்லா அனுப்பி வைக்கிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் படிக்க அரசு செலவுடன் முறையே 3, 5 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. திபெத்தியர்கள் தங்கள் உயர்கல்வியை தொடர அகதிகள் என்ற முத்திரையுடன், கர்நாடகத்தில் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம்.
மொத்தமாக இருக்கக்கூடிய மக்கள் தொகையில் 5232 பேர்களுக்கு பண்படுத்தப்பட்ட, நீர் வசதியுடன் விவசாயம் செய்யத்தக்க 3,500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தனியாக இணையவசதி இலவசமாக வழங்கப் படுகிறது. 22 பகுதிகளுக்கும் தனித்தனியாக செல்போன் டவர்கள் உள்ள தொலைபேசி வசதிகள். நான்கு வகையான வங்கிகள் சிண்டிகேட் வங்கி,ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர்,கூட்டுறவு வங்கி,வெளிநாட்டு பணம் பெற்றுக் கொள்ள Western Union Money Transfer வசதிகள், தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள்;
சுயமாக பால்பண்ணை வைக்க, பொருட்கள் உற்பத்தி பண்ணை, கடை வைத்துக் கொள்ள அரசே வட்டி மற்றும் நிபந்தனை இல்லாமல் கடன் வழங்குகிறது.
அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை வெளியில் சென்று விற்கவும், கடையில் சென்று விற்கவும் அனுமதிக்கப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக (பணிமனை) ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பண உதவி மற்றும் பொருளுதவி குடும்பத்திற்கு மாதம் 5000 ரூபாய்க்கும் மேல் வழங்கப்படுகிறது.
திபெத்திய அகதிகளுக்கு தனி அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்காக அமைக்கப்பட்ட அதிகாரி மாதமொருமுறை மைய அரசுக்கு அறிக்கை அனுப்புகிறார். மற்றபடி முழு சுதந்திரமாக உள்ளனர்.
திபெத்திய அகதிகளுக்கு உள்ள மற்ற சிறப்பியல்புகள்
இளைஞர்களுக்கு தனியாக அமைக்கப்பட்ட Youth Congress
மக்கள் ஒன்றாக கூடுவதற்கு Multipurpose Hall.
அவர்கள் நாட்டில் இருந்து வருபவர்களை தங்கவைக்க அரசு ஓய்வு விடுதி
அவர்கள் விரும்பும் இடத்தில் மதவழிபாட்டுத் தலங்கள்.
வெளியில் சென்று தொழில் தொடங்க வசதி.
கர்நாடக மக்களுடன் இயல்பாக கலந்து கொள்ள அனுமதி. (ஆனால் ஈழ அகதிகள் அனுமதிக்கப்படுவதில்லை) ஆகியவை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
திபெத்திய அகதிகள்முகாம் படங்களை உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன். இதை படித்துவிட்டு படங்களைப் பார்த்துவிட்டு ஈழத்தமிழர்கள் அகதிகளாய் உங்கள் தலைமையில் இயங்கும் அரசு எப்படி வைத்திருக்கிறது என்று நீங்கள் பார்த்துப் புளகாங்கிதம் அடையப் போகிறீர்களா? வெட்கித் தலைகுனியப்போகிறீர்களா?
103 முகாம்களில் ஏழத்தாழ 75,000க்கும் மேல் ஈழத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். தினமும் தங்கள் உடைமைகளை இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு நூற்றுக்கணக்கான பேர் வந்து கொண்டும் இருக்கின்றனர். அரசாங்கங்கள் கட்டிக் கொடுக்கும் குடிசைகள் மற்றும் ஈழ அகதிகள் தாங்களாக கட்டிக் கொள்ளும் குடிசைகள். 90% வீடுகளில் மின்சாரமே இல்லை. பெரும்பாலும் மேற்கூரை சரியாக இல்லாத வீடுகள் அதிகமாக உள்ளன.
அருகில் உள்ள பொது மருத்துவமனைகளில் உடல் நலம் பாதிக்கப்படும் பொழுது, முகாம் பாதுகாவலர் அனுமதி பெற்றுப் போய் பார்த்துக் கொள்ளலாம்.
பாதி முகாம்களில் கழிப்பிட வசதி இல்லை. ஒரு சில முகாம்களில் இடிந்து போய் பராமரிப்பு அற்று நாய்களும், பன்றிகளும் (மனிதன் போக தகுதியற்ற) மலம் கழிக்கக்கூடிய கழிப்பறை, எதற்கும் மேற்கூரை கிடையாது. திறந்த வெளி கழிப்பிடம். பெண்கள் குளிப்பதற்கு நான்கு பக்கமும் ஓலைகளால் வேயப்பட்ட வானமே கூரையாய் குளியலறை.
அனைத்து உரிமைகளும் ஈழத்தமிழர்களுக்கு மறுக்கப்படுகிறது. பொதுவாக ஈழத்தில் உள்ள பெண்கள் குட்டைப் பாவாடை அணிவது வழக்கம்தானே. அதனை இங்குள்ள காவல் துறையினர் மற்றும் ஊழியர்கள் நீங்கள் ஆபாசத்தை தூண்டுகின்றீர்கள் என்ற பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்கின்ற அவலங்களும் அரங்கேறுவது சாதாரணமானது.
மனித உரிமையே இல்லாத இடத்தில் மத சுதந்திரம் எதிர்பார்ப்பது அவர்கள் அறியாமை இல்லையா, முதல்வர் அவர்களே!?
அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஈழக் குழந்தைகள் 1 முதல் +2 வகுப்பு வரை சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். (ஆனால் மண்டபம் பள்ளியில் நேரடியாக +1 மற்றும் +2 வகுப்புகளில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவது இல்லை. அதற்கு பள்ளி நிர்வாகம் சொல்லும் காரணம் என்னவெனில் +2 வகுப்பு தேர்வு முடிவுகள் பாதிக்கப்படும் என அச்சம் கொள்வதாகச் சொல்கிறது. (மண்டபம் பள்ளியின் தற்போதைய நிலை என்னவெனில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 129 மேல்நிலைப் பள்ளிகளில் தர நிலையில் 128வது இடத்தில் உள்ள பெருமையான விதயத்தையும் தங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.
ஒருசில ஈழ முகாம்களில் 1 முதல் 5 வரையான வகுப்புகள் உள்ள பள்ளிகள் உள்ளன. அங்கு ஆசிரியர்களாக அகதிகளால் நியமிக்கப்பட்ட அகதிகள் முகாம்களில் உள்ள படித்த அதிகபட்சமாக இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர்.
பள்ளிக் கட்டிடம் பெரும்பாலும் பாழடைந்து ஓட்டை உடைசலாகத் தான் உள்ளது. உயர்கல்வியில் 2003 வரை இருந்த இட ஒதுக்கீடு நீக்கப்பட்டதால். உயர்கல்வி முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது வசதி உள்ளவர்கள் தனியார் கல்லூரிகளில் படிக்க அனுமதியை தாராளமாக வழங்கியிருக்கிறீர்கள். நம் நாட்டின் தனியார் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் எவ்வளவு என்று உங்களுக்கே தெரியும் முதல்வர் அவர்களே! ஈழத் தமிழர்கள் உயர் படிப்பு படித்து என்ன செய்யப்போகிறார்கள்? என்கிறீர்களா முதல்வர் அவர்களே!
குடியிருக்கவே ஏனோதானோவென்று இடம் கொடுத்த உங்கள் ஆட்சியில் கர்நாடக மாநிலம்போல விவசாய நிலம் கேட்பது சரியில்லை, இல்லீங்களா முதல்வர் அவர்களே!?
நாட்டுப் பிரச்சனைகள் பேசினாலே தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறப்பு முகாம்களுக்கு அனுப்பப்படும் சூழ்நிலையில் மற்ற முகாம்களில் இருக்கும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள STD Booth-களையும், 1 ரூபாய் நாணயப் பெட்டியையும் பயன்படுத்துகின்றனர். அனால் அதையும்கூட முகாம் காப்பாளரின் அனுமதி வேண்டும், என்ற அதிபயங்கர நிபந்தனையல்லவா விதித்திருக்கிறீர்கள், முதல்வர் அவர்களே!
மண்டபம் முகாமில் மூன்று நாள் மட்டும் வெளியே சென்று கூலி வேலை பார்க்க அனுமதி அளித்திருக்கிறீர்கள் முதல்வர் அவர்களே, இதற்கே உங்களுக்க் நன்றி சொல்ல வேண்டும், முதல்வர் அவர்களே.
ஏனென்றால் மற்ற முகாம்களில் அருகிலுள்ள ஊர்களில் சென்று வண்ணமடித்தல், கல்லுடைத்தல், விவசாயத்தில் கூலி வேலை செய்ய சாதாரணமாக அனுமதிப்பதில்லை.
கடுமையான நிபந்தனையுடன் வேலைதான் பார்க்கப்போறியா புலிகளுக்கு ஏதேனும் மறைமுக தொடர்பு வைத்துக்கொண்டு போகிறாயா? என்ற நடுவணரசுக்கு விசுவாசமான கேள்விகணைகளுக்கப்பால் அல்லவா அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
குடும்பத் தலைவருக்கு ரூ. 72, பெண்ணுக்கு ரூ.50 மற்ற உறுப்பினருக்கு ரூ.45 சிறு குழந்தைகளுக்கு ரூ.12.50. 15 நாளுக்கு ஒருமுறை வழங்கப்படுகின்றது. இந்தப் பணத்தை அகதிகள் வாங்குவதற்கும் உங்கள் அதிகாரிகள் கொடுப்பதற்கும், அடாடா அதுவும் மேன்மை தங்கிய தங்கள் ஆட்சியில் எனக்கே எழுதக் கூச்சமாக இருக்கிறது முதல்வர் அவர்களே!
மண்டபம் முகாம்களில் அறிவிக்கப்படாத தினம்தோறும் ஆய்வும் மற்ற முகாம்களில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஆய்வும் என்று நடைபெறுகிறது. இந்த ஆய்வுக் கொடுமை இருக்கிறதே முதல்வர் அவர்களே அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.
ஆய்வின் போது தங்கள் சொந்த மண்ணைப் பற்றிப் பேசினால் தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற கொடுமை இருக்கிறதே, சிங்கள இராணுவமாய் உங்கள் அதிகார வர்க்கம் அதட்டி,அடக்கி நடத்தும் போக்கு இருக்கிறதே, சிங்களரெல்லாம் எம்மாத்திரம்?
தன் நாட்டை விட்டு இங்கு வரும் அகதிகளிடம் மூன்று நாட்கள் மண்டபம் முகாமில் உள்ள தனி சிறையில் அடைக்கப்பட்டு அவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொள்கிறார்களா என்ற சந்தேகத்துடன் அவ்வாறு சோதனை செய்யும் போது சற்று வாட்டசாட்டமான இளைஞர்கள் கோபப்பட்டால் அவர்களை உடனேயே செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கின்றனர்.
செங்கல்பட்டு சிறப்பு முகாம் என்பது அறிவிக்கப்படாத ஒரு சித்திரவதைச் சிறைக்கூடம். நடுவணரசு ஒரு கண்ணில் சுண்ணாம்பையும், தங்கள் அரசு ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து பார்ப்பதை எங்கு போய்ச் சொல்வது?
திபெத்திய அகதிகளைப் போல் ஈழத்தமிழர்களைப் பார்க்கவில்லையென்றாலும், குறைந்தபட்சம் அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களை மனிதர்களாகவாவது பாவித்து, வாழ்வுரிமையைப் பாதிக்காத அளவு வாழ்வதற்கான உத்தரவாதத்தினை தமிழினத் தலைவரான நீங்களே தராதபட்சத்தில் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற
தங்கள் பம்மாத்து பாவ்லாக்கள் எல்லாம் யாரை ஏமாற்ற? யாரைத் திருப்திப்படுத்த முதல்வர் அவர்களே!
இந்தியாவை/ தமிழகத்தைத் தவிர்த்து மற்ற நாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற ஈழத்தமிழர்களை மற்ற நாடுகள் தன் நாட்டு குடிமகன் போல் மதித்து தனது அரசு பொறுப்புகளிலும் அமர்த்தியுள்ளார்கள். ஆனால் உங்கள் அரசு ஈழத்தமிழர்களை மனிதர்களாகக்கூட நினைக்கமறுக்கிற சூழலை வைத்துக்கொண்டு இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்று பெத்தபேராக வைத்துக்கொண்டால் போதுமா? என்பதைக் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள் முதல்வர் அவர்களே!
அப்படிப்பட்ட இந்திய அரசுக்கு நீங்களும் துணைபோய்க்கொண்டு நடுவணரசோடு சேர்ந்துகொண்டு ஈழத்தில் உள்ள தமிழர்களுக்கும் இங்கு அகதிகளாய் வந்துள்ள தமிழர்கள் கண்களுக்கும் சுண்ணாம்பு தீட்டுகிறீர்களே, இது நியாயமா?
இராமதாசுக்கு பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு இரண்டு முறை ஆட்சியைப் பறிகொடுத்தேன் என்று தேய்ந்துபோன இசைத்தட்டாக திரும்பத் திரும்பச் சொல்வதை விடுங்கள்; அப்போதும் கூட "இதேவேளை இலங்கை தமிழர் பிரச்னைகளுக்காக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் தாக்கப்படுவதை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் சொல்லி உங்களின் காங்கிரசு பக்தியை எடுதியம்பியிருக்கிறீர்கள். கடைசிகாலத்தில் அரசு அஹ்டிகாரிகளுக்கு துரோகம், ஈழத்தமிழர்களுக்குத் துரோகம், ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த நம் சகோதரத் தமிழர்களுக்கு துரோகம் என்று நீங்கள் பட்டியலை நீட்டிக்கொண்டே போவது உங்கள் பாவ மூட்டையின் சுமை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பதை மட்டும் மீண்டும்மீண்டும் நினைவு படுத்துகிறேன் முதல்வர் அவர்களே!
"சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இறங்கா ரடீ - கிளியே
செம்மை மறந்தா ரடீ...."
பாரதிகூட உங்களையே நினைத்து இதை பாடியிருப்பானோ என்று தோன்றுகிறது.
அடுத்த மடலில் உங்களைச் சந்திக்கும்வரை!
அசாதாரணத் தமிழன்,
- ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா. (albertgi@gmail.com)
நன்றி -கீற்று .காம்
நன்றி - adrasaka.blogspot.com
ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்! - தமிழருவி மணியன்
சில நாட்களுக்கு முன் தமிழருவி மணியன் அவர்கள் விகடனில் கலைஞருக்கு ஒரு கடிதம் போட்டு கலக்கினார். இப்போது அவரது அடுத்த தாக்குதல் புரட்சித்தலைவிக்கு...
ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்! - தமிழருவி மணியன்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்.
உங்களை நினைத்தால் ஒரு பக்கம் வியப்பாகவும், இன்னொரு பக்கம் வேதனையாகவும் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இது ஓர் ஆணாதிக்க உலகம். நீங்கள் இருந்த திரைப்பட உலகமும், இருக்கும் அரசியல் உலகமும் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் மோசமான ஆளுகைக்கு ஆட்பட்டவை. 1964-ல் ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை’ படத்தில் முதன் முதலாக நீங்கள் அறிமுகமானபோது, தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் முதலமைச்சர் நாற்காலியில் ஒரு நாள் அமரக்கூடும் என்று கண்ணுறக்க வேளையில் கனவுகூடக் கண்டிருக்க மாட்டீர்கள்!
தமிழர்களின் ரசனை எல்லா வகையிலும் வித்தியாசமானது. திரைப்படங்களில் நாயக, நாயகியராய் இணைந்து நடித்த இருவரையும் முதல்வர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்த்த வரலாற்றுச் சாதனை, உலகில் தமிழகத்தைத் தவிர வேறெங்கும் வாய்த்ததே இல்லை.

எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இருவரின் ஆதிக்கத்தில் கட்டுண்டுக் கிடந்த திரையுலகில் அடியெடுத்துவைத்த நீங்கள், இரு வேறுபட்ட குணாம்சங்கள்கொண்ட அந்தக் கலையுலகச் சிகரங்களோடு கைகோத்து உங்கள் தோற்றப் பொலிவினாலும், நடிப்புத் திறமையாலும் முதன்மைக் கதாநாயகியாக முன்னேறியதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், கதாநாயகிக் கட்டம் முடிந்ததும் தமக்கையாய், தாயாய் வேடம் பூண்டு காலம் முழுவதும் ஒரு நடிகையாகவே வாழ்ந்து முடித்துவிட விரும்பாமல், எம்.ஜி.ஆர். ஆதரவில் 1981-ல் அரசியல் உலகில் கால் பதித்து, ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் விரித்துவைத்த சதிவலையை அறுத்தெறிந்து, அவர்களால் இழைக்கப்பட்ட அவமானங்களை சகித்துக்கொண்டு, அ.தி.மு.க-வை உங்கள் அசைக்க முடியாத தலைமையின் கீழ் கொண்டுவந்தீர்களே... அந்த அரிய சாதனை உண்மையிலேயே வியப்புக்கு உரியது!
உங்களுடைய விரிந்த வாசக ஞானம், தெளிந்த ஆங்கிலப் பேச்சு, தளராத தன்னம்பிக்கை, அபூர்வமான அரசியல் ஆளுமை, சர்க்கஸ் கூடாரத்தின் ரிங் மாஸ்டரைப்போல் உங்கள் கட்சியின் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அசாத்திய ஆற்றல் அனைத்தும் நீங்கள் வளர்த்துக்கொண்ட பலமான பாதுகாப்பு அரண்கள். எம்.ஜி.ஆர். கை தூக்கிவிட்டதனால்தான் அரசியலில் நீங்கள் இந்த உயரத்தை எட்ட முடிந்தது என்பது பிழையான கருத்து. சரோஜாதேவியும், லதாவும் எம்.ஜி.ஆரே விரும்பி அரசியலில் ஆளாக்க முனைந்து இருந்தாலும், உங்களைப்போல் உருவாகி இருக்க முடியாது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்பு உங்கள் தலைமை வாய்த்திருக்காவிட்டால், அ.தி.மு.க. ஓர் அரசியல்சக்தியாக நீடித்திருக்காது என்பதும் நிஜம்.
எல்லாம் சரி. ஆனால், ஒரு கோட்டை எவ்வளவு பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், அதற்குள் சில பலவீனங்கள் புலப்படுவது இயல்பு. உங்கள் பலங்களுக்கு சமமாக பலவீனங்களும் பாதித்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? 'பரிசோதிக்கப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது’ என்றார் சாக்ரடீஸ். நீங்கள் பரிசோதித்துப் பார்த்து, பள்ளத்தில் வீழ்த்தும் பலவீனங்களில் இருந்து விடுபட விரும்பாததுதான் வேதனைக்கு உரியது.

காமராஜரைப்போலவோ, கலைஞரைப்போலவோ படிப்படியாக அரசியலில் நீங்கள் வளர்ந்தவர் இல்லை. உங்கள் அரசியல் பிரவேசம் 1981-ல் அரங்கேறியது. உடனே அ.தி.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாளராக உயர்த்தப்பட்டீர்கள். 1988-ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றினீர்கள்.
1989 தேர்தலுக்குப் பின்பு தமிழக சட்டமன்ற வரலாற்றில் எதிர்க் கட்சித் தலைவராக அமர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றீர்கள். நிதி நிலை அறிக்கையை முதல்வராக நின்று சட்டமன்றத்தில் கலைஞர் சமர்ப்பித்தபோது, நீங்கள் உருவாக்கிய கலவர நாடகத்தில் நேர்ந்த விபரீதக் காட்சிகளின் விளைவாக, மக்களின் அனுதாபத்தைப் பெற்று 1991-ல் கோட்டையில் முதல்வராகக் கொலுவீற்றீர்கள்.
யாருக்கும் எளிதில் கிடைக்காத வரம் தமிழக வாக்காளர்களால், உங்களுக்கு எளிதாக வழங்கப்பட்டது. எளிதில் கிடைக்கும் எதுவும் பெரிதாகப் போற்றப்படுவது இல்லை. வாக்காளர்கள் விருப்பத்தோடு வனைந்து கொடுத்த பதவிக் குடத்தை நீங்கள் நந்தவனத்து ஆண்டியைப்போல் கூத்தாடிப் போட்டுடைத்தீர்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் நீங்கள். நேர்த்தியாக உங்கள் நிர்வாகம் நடந்திருந்தால்... கலைஞர் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பே கனிந்து இருக்காது. அவருடைய குடும்பமும், பரிவாரமும் கோடிக் கோடியாய்ப் பணத்தைக் குவிக்கும் சந்தர்ப்பம் பிறந்திருக்காது. கலைஞரின் குடும்பம் உங்களுக்குத்தான் அன்றாடம் நன்றி சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக, ஆ.ராசா உங்களுக்கு நிரம்பவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.
அறிவியல்பூர்வமாக ஊழல் செய்தவர் கலைஞர்’ என்று சர்க்காரியா சொன்னதை உரத்த குரலில் ஊர் ஊராய் முழங்கிய நீங்கள், ஊழலின் நிழல் படாத உன்னதமான ஆட்சியை வழங்கிவிடவில்லை. அதிகாரத் துஷ்பிரயோகம், ஆணவப் போக்கு, சொத்துக் குவிப்பு, ஊழலில் திளைத்த அமைச்சர் குழு, விமர்சனங்களை விரும்பாத சர்வாதிகாரச் சாயல், பழிவாங்கும் மனோபாவம் போன்றவை வாக்காளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால், உங்கள் மீது இருந்த நம்பிக்கை நலிவடைந்தது. 'ஸ்பிக்’ விவகாரத்தில் உங்கள் விருப்பத்துக்கு வளைந்து கொடுக்காத ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகாவின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டதன் பின்புலம் அறியாமல் தமிழகம் அதிர்ந்தது.

தி.மு.க. வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தின் மீது நடத்தப்பட்ட கொடுமையான தாக்குதலின் பின்னணி புரிந்ததும் நல்ல அரசியலை நாடுவோர் நெஞ்சம் நடுங்கியது. எல்லாவற்றுக்கும் சிகரம்போல் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் அமைந்துவிட்டது. உங்கள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நீங்கள் நடத்திவைத்த திருமணத்தில் பளிச்சிட்ட ஆடம்பரம் பாமர மக்களைக்கூட முகம் சுளிக்கவைத்தது. உங்கள் வீழ்ச்சி கலைஞரின் வியூகத்தில் விளைந்துவிடவில்லை. உங்களுக்கான பள்ளத்தை நீங்களே வெட்டிய விதம்தான் பரிதாபத்துக்கு உரியது.
முன்னாள் முதல்வரே... கடந்த காலத்தை இன்று நிதானமாகத் திரும்பிப் பார்த்து நீங்கள் கற்றறிய வேண்டிய பாடங்கள் கணக்கற்றவை. மிகுந்த நம்பிக்கையுடன் மக்களால் 1991-ல் ஆட்சியில் அமர்த்தப்பட்ட நீங்கள், 1996 தேர்தலில் மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டீர்கள். உங்கள் அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் தோற்கடிக்கப்பட்டனர்.
நீங்களே பர்கூர் தொகுதியில் மக்கள் அறியாத ஒரு மனிதரிடம் தோற்கும் நிலை நேர்ந்தது. சரிந்துவிட்ட உங்கள் அரசியல் செல்வாக்கை முற்றாக முடித்துவிட முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர் காரியத்தில் கண்வைத்தார். உங்கள் மீது 40-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விரைவாக உங்களை சிறைக்கு அனுப்பிவைக்க அடித்தளம் அமைக்கப்பட்டது. கலைஞர் கண்ட கனவு நனவானது. நீங்கள் சில காலம் சிறைவைக்கப்பட்டீர்கள். 'டான்சி’ வழக்கு உங்கள் உறக்கத்தைக் கலைத்தது.
சொத்துக் குவிப்பு வழக்கு 'விடாது கருப்பு’ என்பதுபோல் இன்று வரை தொடர்ந்து உங்களைத் துன்புறுத்துகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடியை நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்திய 'நேர்மையானவர்கள்’, நீங்கள் 60 கோடி சேர்த்துவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை போனதும், இன்று வரை கூச்சம் இல்லாமல் உங்கள் ஊழல் குறித்து வக்கணையாக விமர்சிப்பதும் வேறு கதை.

ஒரே ஒரு ரூபாய் தவறாகப் பெற்றாலும் ஊழல்... ஊழல்தான். யார் செய்தாலும் ஊழல் தண்டனைக்கு உரியதுதான். ஐந்து ஆண்டு ஆட்சியில் நீங்கள் செய்த தவறுகள் மொத்தமாக முற்றுகையிட்டு உங்களை அடியோடு வீழ்த்தியதும், உங்கள் அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிட்டது என்றே அனைவரும் ஆரூடம் கணித்தனர். 'ஒழிந்தார் ஜெயலலிதா; அழிந்தது அ.தி.மு.க.’ என்று மகிழ்ந்தது கலைஞரின் பரிவாரம்.
ஃபீனிக்ஸ் பறவை தன் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும்’ என்பது நிஜம் அல்ல. ஆனால், அரசியல் உலகம் அதிசயிக்கும் வகையில் உங்கள் சாம்பல் மேட்டில் இருந்து நீங்கள் உயிர்த்தெழுந்ததுதான் நிஜம். உங்கள் தவறுகளைத் தமிழகத்து மக்கள் மிகவும் பெருந்தன்மையுடன் மன்னித்து மீண்டும் ஆட்சி நாற்காலியில் அமரச் செய்தார்கள். 140 தொகுதிகளில் நின்று 132 தொகுதிகளில் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் நீங்கள் அரசை அமைத்தீர்கள்.
உங்களோடு கூட்டணி சேர்ந்தவர்கள் 64 தொகுதிகளில் வெற்றிக் கனியைப் பறித்துச் சுவைத்தனர். ஆடம்பர மணவிழா, 'சகோதரி’ சசிகலாவின் குடும்ப அத்துமீறல், டான்சி நிலப் பேரம் என்ற குறைகளை எல்லாம் புறந்தள்ளி 234 தொகுதிகளில் உங்கள் கூட்டணிக்கு 196 எம்.எல்.ஏ-க்களை வழங்கிய வாக்காளர்கள் உங்களிடம் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்றுதான்... நல்லாட்சி! அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நீங்கள் நடந்துகொண்டீர்களா சகோதரி? மருத்துவர் ராமதாஸைப்போல் அரசியல் ஆதாயத்துக்காக 'அன்புச் சகோதரி’ என்று நான் அழைக்கவில்லை.

சட்டமன்றத் தேர்தல் 2001-ல் நடந்தபோது நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தீர்கள். அது ஒரு தவறான நடவடிக்கை. தேர்தலில் உங்கள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியதும் நீங்கள் முதல்வராக முயன்றது இரண்டாவது தவறு. கிரிமினல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் முதல்வராக முடியாது என்பது சட்டம்.
ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து தமிழகத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஃபாத்திமா பீவி உங்களை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தலில் நிற்க முடியாமல் தடுக்கப்பட்ட முதலமைச்சர் நீங்கள் ஒருவரே. ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட முதல்வரும் நீங்களே. கலைஞருக்குள்ள சாமர்த்தியம் உங்களுக்கு சாத்தியப்படவில்லை. அதனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்பு நீங்கள் பதவியில் இருந்து விலகிப் பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினீர்கள். யாருக்கு எப்போது எது கிடைக்கும் என்று யார்தான் அறிவார்?
வீதியில் விளையாடிய கரிகாலன் கழுத்தில் யானை மாலையிட்ட கதையை எம் கண் முன்னால் நிகழச் செய்தவர் நீங்கள். நான்கு மாதங்கள் முதல்வர் நாற்காலியில் பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தாலும், பின்னால் இருந்தபடி பரிபாலனம் செய்தது நீங்கள்தானே சகோதரி!
ஒருவழியாக சட்டம் எழுப்பிய தடுப்புச் சுவரைத் தகர்த்துவிட்டு, ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியைத் தன்னிடம் தக்கவைத்துக்கொள்வதில் நீங்கள் காட்டிய முனைப்பு, அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்குக்கூட எளிதில் கைவராதது! நீங்கள் மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததே அரிய சாதனைதான். ஆனால், அதன் மூலம் மக்கள் அடைந்த பயன் என்ன?
உங்களைச் சிறைக்கு அனுப்பிய கலைஞரை நீங்கள் சிறைக்கு அனுப்ப நாள் குறித்து நள்ளிரவில் கைது செய்து, மக்கள் அனுதாபத்தை அவர் பக்கம் திருப்பும் திருப்பணியில்தானே ஈடுபட்டீர்கள்!

உங்களுக்குப் பிரச்னை கலைஞர். கலைஞருக்குப் பிரச்னை நீங்கள். உங்கள் இருவர் கால்களிலும் மாறி மாறி மிதிபடுவது மக்கள். 'விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என் செய்ய நினைத்தாய்?’ என்று சரியாகத்தான் புலம்பினான் பாரதி.
உங்களுடைய அசைக்க முடியாத பலம் அபாரத் தன்னம்பிக்கை. அதுவே சில நேரங்களில் வரம்பு கடந்து பிறர் பார்வையில் தலைக்கனமாய் தரிசனம் தரும்படி நடந்துகொள்வதுதான் உங்களது மோசமான பலவீனம்.
ஜனநாயக அமைப்பில் விமர்சனங்களை ஆரோக்கியமாக நேர்கொள்ளும் தன்மை மிக முக்கியம். தமிழகத்தில் உள்ள ஆறரைக் கோடி மக்களும் பன்னீர்செல்வம், செங்கோட்டையன்போன்று கை கட்டி, வாய் பொத்தி, முதுகு வளைந்து 'அம்மா’ என்று ஆராதிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதுதான் தவறு. ஊடகங்கள் அனைத்தும் ஒத்தூத வேண்டும் என்ற விருப்பம் கலைஞரைப்போல் உங்களுக்கும் உண்டு.
'இந்து’ நாளிதழ் உங்கள் சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கைகள் குறித்துக் கட்டுரை தீட்டியதற்காக என்.ராம் உட்பட ஆறு பேரை கைது செய்ய முயன்றது சரியான நடவடிக்கையா என்று இப்போது சிந்தியுங்கள். பல்வேறு இதழ்கள் மீது வழக்குப் பதிவு செய்த உங்கள் செயல் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது இல்லையா?
அரசு ஊழியர்கள் 2003-ல் ஓய்வூதியச் சலுகைகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது ஒரு துளி மையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரை வேலை நீக்கம் செய்ததும், இரவில் வீடு புகுந்து அவர்களைக் கள்வர்கள்போல் கைது செய்ததும், சாலைப் பணியாளர்கள் வாழ்வோடு விளையாடியதும்தான் உங்கள் வீழ்ச்சிக்கு வியூகம் அமைத்ததை இப்போதாவது உணர்ந்துவிட்டீர்களா? அப்போது 'அரசு ஊழியர்களை அழைத்துப் பேச வேண்டும்;
அன்பால் சாதிக்க வேண்டும்’ என்று உங்களுக்கு அருளுரை வழங்கிய கலைஞருடைய இப்போதைய ஆட்சியில், அதே அரசு ஊழியர்கள் காவல் துறையால் நடுவீதியில் கடுமையாகத் தாக்கப்பட்டனர் என்பது தனியரு கொடுமை!
திருமங்கலம் தேர்தல் பாணி குறித்துக் கடுமையாக விமர்சிக்கும் நீங்கள்தான், உங்கள் ஆட்சியில் இடைத்தேர்தல்கள் நடந்தபோது, அமைச்சர்களின் படையெடுப்பை அறிமுகப்படுத்தினீர்கள். சென்னை மாநகராட்சி இடைத்தேர்தலில் விதிமுறைகளை மீறி உங்கள் தொண்டர்கள் செயல்பட்டபோது நீங்கள் வேடிக்கை பார்த்தீர்கள்.

சாத்தான்குளம் இடைத்தேர்தலில் நிர்வாக எந்திரத்தை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தினீர்கள். வாக்காளர்களுக்கு 'அன்பளிப்பு' தரும் 'ஜனநாயகக் கடமை’யை நீங்களும் செய்தீர்கள். கலைஞரின் குடும்பம் குறித்துப் பேசும்போதெல்லாம், சசிகலா குடும்பம் உங்கள் நினைவில் நிற்பதில்லை. திரைப்பட உலகில் தேவைக்கு மேல் நீங்கள் சொத்து சேர்த்தாயிற்று. உங்களுக்கென்று தனியாக ஒரு குடும்பம் இல்லை. 'தத்துவஞானிகள் ஆளவேண்டும்.
அவர்களுக்குக் குடும்பம் கூடாது’ என்றார் பிளேட்டோ. அந்த வரம் உங்களுக்கு இயல்பாக வாய்த்திருந்தது. ஒரு செப்புக் காசும் நேர்மை தவறிச் சேர்க்காமல் ஊழலற்ற நிர்வாகத்தை நீங்கள் நினைத்திருந்தால், தமிழக மக்களுக்குத் தந்திருக்க முடியும். சசிகலா குடும்பம் உங்கள் கால்களை நேர் வழியில் நடக்கவிடாமல் பிணைத்திருக்கும் இரும்புச் சங்கிலி என்று நீங்கள் இப்போதேனும் உணர்ந்தீர்களா?
போகட்டும். உங்கள் 10 ஆண்டு ஆட்சியில் நல்லதே நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. கந்துவட்டிக் கொடுமையில் இருந்து ஏழைகளைக் காப்பாற்றிய நடவடிக்கை, பாமர மக்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டிய லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்த நற்செயல், வீரப்பன் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் வெளிப்படுத்திய துணிச்சல், காஞ்சி சங்கராச்சாரியாரைக் கைது செய்ததில் காட்டிய கண்டிப்பு, மழை நீர் சேகரிப்பில் மக்களை ஈடுபடுத்திய ஆளுமை, கலைஞரால் கை கழுவப்பட்ட வீராணம் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிச் சென்னையின் தாகம் தவிர்த்த ஆட்சித் திறன், தாய்மை உணர்வுடன் தொடங்கிய தொட்டில் குழந்தைத் திட்டம் மூலம் வெளிப்படுத்திய சமூகப் பார்வை, கல்வி வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு பள்ளிப் பிள்ளைகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய கருணை போன்றவற்றுக்காக நிச்சயம் நீங்கள் பெருமைப்படலாம்.
உங்கள் ஆட்சியின் சிறப்பு அம்சமாக மக்கள் மறவாமல் நினைப்பது சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு. கட்சிக்காரர்கள் அதிகாரம் செலுத்தும் கொத்தடிமைக் கூடங்களாக காவல் நிலையங்கள் கழிந்துபோக நீங்கள் அனுமதித்தது இல்லை!
சகோதரி... நீங்கள் மூன்றாவது முறை முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறீர்கள். வலிமையான கூட்டணி உங்களுக்கு வாய்ப்பாக அமைந்து இருக்கிறது. வாக்காளர்களுக்கு வேறு வழி இல்லை. ஜனநாயகத்தில் நன்மை தீமைக்கு நடுவே போட்டி நடந்தால், மக்கள் நன்மையின் பக்கமே நிற்க விரும்புவார்கள்.
அதற்கான சூழல் இன்னும் கனியாதபோது, பெரிய தீமையைப் புறந்தள்ளிவிட்டு, சிறிய தீமையைத்தான் அவர்கள் தேர்ந்தெடுக்க இயலும். சாம்பல் மேட்டில் இருந்து நீங்கள் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பு உள்ளது. தேர்தல் களத்தின் ஆதரவுக் காற்றை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.
அந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடிந்தால்...ஈழத் தமிழர் நலன் காக்க உண்மையான உள்ளுணர்வுடன் நீங்கள் செயற்பட வேண்டும். தமிழகத்தின் ஒரு மீனவரும் கடலில் சாவை சந்திக்காத நிலை வர வேண்டும். இலவசத் திட்டங்கள் என்னும் போர்வையில், ஏழை மக்களை ஏழை மக்களாகவே என்றும் கையேந்தும் இழிநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் காமராஜர் வழியில் உருப்படியான திட்டங்கள் தீட்ட வேண்டும்.
டாஸ்மாக்கை அரசுடமையாக்கிய பாவத்தைச் செய்த நீங்கள் பூரண மதுவிலக்கை வழங்க முடியாமற்போனாலும், வீதியெங்கும் பரவியிருக்கும் கடைகளைக் குறைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஊழலற்ற ஆட்சியைத் தந்து நீங்கள் உயர வேண்டும்.
சசிகலா சாம்ராஜ்யம் மீண்டும் எழுவதற்கு எந்த நிலையிலும் நீங்கள் இடம் அளித்துவிடலாகாது. இந்த முறை நீங்கள் தவறு இழைத்தால்... இனி வாழ்வின் இறுதி வரை ஆட்சி நாற்காலியில் அமர முடியாது என்றே உணர்ந்து செயற்படுங்கள். ஆட்சி மாற்றம் வெறும் காட்சி மாற்றமாக முடிந்துவிடக் கூடாது என்பதுதான் எங்கள் பிரார்த்தனை.
உழுகலப்பையைப் போல் தாழ்ச்சிகொண்டவன் நான்’ என்றார் இயேசுபிரான். பணிவே நீங்கள் அணியும் மிக உயர்ந்த அலங்காரம் என்பதை மறவாதீர்கள்!
இப்படிக்கு,
நீங்கள் நிச்சயம் மாறியிருப்பீர்கள்
என்ற நம்பிக்கையுடன்,
தமிழருவி மணியன்
நன்றி - adrasaka.blogspot.com
நன்றி - adrasaka.blogspot.com
Wednesday, March 9, 2011
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து! இப்படியும் ஒரு கலெக்டர்
அன்பு வேண்டுகோள், கீழே பதிந்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து வாசியுங்கள், இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை அதில் பொதிந்து கிடக்கிறது
------------------------------------------------------------------------------
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து! இப்படியும் ஒரு கலெக்டர்

''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''
சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.
''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.
''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.
காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.
நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.
நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.
இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.
''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!
Saturday, March 5, 2011
கலைஞருக்கு ஒரு திறந்த மடல்! தமிழருவி மணியன்
தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்! நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள்.
காமராஜர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர். நீங்கள் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கொடிகட்டிப் பறப்பவர். காமராஜர் நாட்டுப் பணியில் தாயின் உறவு உட்பட சகலத்தையும் துறந்தார். நீங்கள் எதையும் துறக்காமல் பொதுவாழ்வின் மூலம் சகல நலன்களையும் வீட்டுடைமையாக்கிக்கொண்ட வித்தகராய் விளங்குகிறீர்கள்!
ஈ.வெ.கி.சம்பத் தி.மு.கழகத்திலிருந்து அவசரப்பட்டு விலகிய பின்பு, அண்ணாவுக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியனை இரண்டாம் இடத்திலேயே இருக்கவிட்டு, முதலிடத்தைப் பிடித்து நீங்கள் முதல்வரானது – உங்கள் சாகசச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக்கூடியது!
ஓர் உறையில் இரு வாட்கள் இருக்கலாகாது என்று சிந்தித்த நீங்கள் செயற்குழுவின் ஆதரவைத் திரட்டி, செல்வாக்குமிக்க எம்.ஜி.ஆரையே விரட்டி, தனிக்காட்டு ராஜாவாக மகுடம் சூட்டிக்கொண்ட மகத்துவத்தை யார் மறக்கமுடியும்? அரசியல் விளக்கங்களை எழுதவிடாமல் அன்றைய ‘இந்திரா தர்பார்’, செய்தித் தணிக்கையைக் கொண்டு வந்தபோது, ‘கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்’ என்ற முல்லைக் கவி பாடல் மூலம் இலக்கியப் போர்வையில் அரசியல் வகுப்பு நடத்திய உங்கள் ஆற்றல் யாருக்கு வரும்?
‘மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது’ என்ற மறக்கமுடியாத வசனத்தைப் ‘பூம்புகார்’ திரைப்படத்தில் தீட்டிய உங்கள் மனசாட்சி முற்றாக உறங்கிப் போனதுதான் தமிழருக்கு வாய்த்த சாபம்.
‘தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில், தமிழ் வீரம் போதித்த அறிஞர் அண்ணா கல்லூரியில் பயின்ற எனக்கு அந்த உணர்வும் மழுங்கி விடுமேயானால், நடைப் பிணம் நிகர்த்தவனாகி விடுவேன்’ (கலைஞர் கடிதம் தொகுதி – 5) என்றீர்களே, எந்தெந்த வகையில் நீங்கள் பெரியாரையும், அண்ணாவையும் இன்று பின்பற்றுகிறீர்கள் என்று எங்களுக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா?
‘சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்ன தெரியுமா? ஐந்து கொள்கைகள்தான். கடவுள் ஒழிய வேண்டும். மதம் ஒழிய வேண்டும். காங்கிரஸ் ஒழிய வேண்டும். காந்தி ஒழிய வேண்டும். பார்ப்பான் ஒழிய வேண்டும். அன்று முதல் இன்று வரை அதே கொள்கைதான் (இறுதிப் பேருரை- 19-12-73) என்றார் பெரியார். இந்த 5 கொள்கைகளில், தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில் பயின்ற நீங்கள் இன்று எதைப் பின்பற்றுகிறீர்கள்? மஞ்சள் துண்டு எந்தப் பகுத்தறிவின் அடையாளம்?
சாய்பாபாவை வீட்டில் வரவேற்றுப் பேசியதும், உங்கள் வீட்டார் அவர் கால்களில் விழுந்து ஆசி பெற்றதும் பெரியாரின் பகுத்தறிவுப் பாசறை தந்த பாடமா? தன்னை வாழ்த்தினால் ‘நண்பர்’ என்று புகழ்வதும், விமர்சனம் செய்தால் ‘பூணூல்’ என்று எள்ளி நகையாடுவதும் எந்த வகையில் பார்ப்பன எதிர்ப்பு? கஸ்தூரிபாயைத் தன் வழியில் திருப்பியவர் காந்தி. நாகம்மையையும், மணியம்மையையும் தன் மனதின் போக்குக்கேற்ப மாற்றியவர் பெரியார். வீட்டில் கொண்டுவர முடியாத மாற்றத்தை நாட்டில் கொண்டுவருவேன் என்பது நகைப்புக்குரியது அல்லவா! பக்திப் பரவசத்தில் கோயில் கோயிலாகச் சுற்றுவது ஜெயலலிதா மட்டுமன்று, உங்கள் வீட்டு உறவுகளுந்தானே!
அண்ணா இறுதி நாள் வரை காங்கிரஸை ஆதரிக்கவில்லை. மதுவிலக்கை எதிர்க்கவில்லை. ஆனால், நீங்கள் இரண்டு நிலைகளிலும் அண்ணா வழியில் நிற்கவில்லையே; ‘என்னைப் பொறுத்த வரையில் பதவி முடிவு மட்டுமல்ல, வாழ்வின் முடிவே ஏற்படப் போகிறது என்று தெரிந்தாலும், அப்போதும் என் நினைவு உள்ளவரையில் பெரியாரையும் அண்ணாவையும் அவர்கள் தந்த லட்சியங்களையும் கொள்கைகளையுந்தான் கூறிக்கொண்டிருப்பேன். மரணப் படுக்கையில் என் நாக்கு அசையும் சக்தியை இழந்துவிடுமானால், என் நெஞ்சத் துடிப்புகள் கழகத்தின் பெருமைக்குரிய கொள்கைகளையே ஒலித்துக் கொண்டிருக்கும். அம்மா, அப்பா என்று சொல்லி உயிர் பிரியப் போவதில்லை.
‘அண்ணா! அண்ணா!’ என்று சொல்லித்தான் இந்த உயிர்த் துடிப்புகள் இறுதியாக அடங்கும்’ (கலைஞர் கடிதம் தொகுதி – 5) என்று சொன்ன நீங்கள் அண்ணா எதிர்த்த காங்கிரஸின் உறவுக்காக ஏங்கி நின்றதும், நிற்பதும் நியாயந்தானா கலைஞரே?
‘சித்ரவதை, தூக்கு மேடை, கால் வேறு கை வேறாக வெட்டிக் கடலில் எறிவது போன்ற எந்தக் கொடுமையையும், கொண்ட கொள்கைகளுக்காகத் தாங்கத் தயார்! இது அண்ணாவின் மீது ஆணையாக எடுத்துக்கொண்டுள்ள சூளுரை’ என்று சொன்ன கலைஞரே… உங்களால் ஈழத் தமிழருக்காக மூன்று மணி நேரத்துக்கு மேல் உண்ணாவிரதம்கூட இருக்க இயலவில்லையே? எதையுமே நீங்கள் அழகாக எழுதுகிறீர்கள். உணர்வு ததும்பப் பேசுகிறீர்கள்… ஆனால், எழுத்துக்கும் பேச்சுக்கும் எதிராகவே நடக்கிறீர்கள். அது ஏன்?
‘முந்திரா ஊழல் முப்பத்து முக்கோடி தேவர்களும் அறிந்த விவகாரம். அமீர்சந்த் பியாரிலால் விவகாரம், அதிலே சிக்கிக் கொண்டு தவித்த தவிப்பு, இதெல்லாம் ஈரேழு பதினாலு உலகமும் சிரிப்பாய்ச் சிரித்ததை யாரும் மறந்து விடவில்லை’ என்றும் ‘காங்கிரஸ் மாளிகை பாழடைந்த மண்டபமாகி விட்டது. அதிலே வெளவால்கள் குடியேறத்தான் செய்யும்’ என்றும் (கலைஞர் கடிதம், தொகுதி – 1) 1968-69-களில் உடன்பிறப்புகளிடம் கடிதங்கள் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பைக் கடுமையாக விதைத்துவிட்டு, 1971 தேர்தலில் அதே காங்கிரஸைக் கட்டித் தழுவியபடி களத்தில் நின்றீர்களே… அந்த நட்புக்குச் செலுத்திய நன்றிதான் கழகத்தின் மீது காங்கிரஸ் பொழிந்த புகழுரைகள்(!).
நீங்கள் பதவிப் பல்லக்கில் பவனி வருவதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் தோள் கொடுத்தால் காங்கிரஸ் சமதர்மம் இனிக்கும். சுமப்பதை விட்டுவிட்டு, அவர்களும் உங்களோடு சேர்ந்து பல்லக்கில் சவாரி செய்ய நினைத்தால் காங்கிரஸின் ஆதிக்கம் கசக்கும். ‘சமத்துவம் இன்மையே… உனக்குப் பெயர்தான் இந்து மதமா?’ என்று கேட்டார் அண்ணல் அம்பேத்கர்.
‘சுயநலமே… உனக்குப் பெயர்தான் தி.மு.கழகமா?’ என்று கேட்கத் தோன்றுகிறது கலைஞரே! ‘பதவிகளுக்காக, பவிசுகளுக்காக, அந்தஸ்துகளுக்காக, அதிகாரங்களுக்காக இந்த இனத்தைக் காட்டிக் கொடுக்கிற இழி செயலுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற ஒரு சாதாரணத் தொண்டன்கூடத் தயாராக இல்லை’ (முரசொலி 7-7-1981) என்று வீர முழக்கமிட்டவர் நீங்கள். ஆனால், ஈழம் எரிந்தபோது, நம் இனம் கரிந்தபோது களத்துக்கு வராமல் பாசறையிலேயே பதுங்கிவிட்டது ஏன் கலைஞரே?
‘தியாகத் திருவிளக்கு சோனியா காந்தி’ என்று பரவசம் பொங்கப் புகழ்மாலை சூட்டிய நீங்கள், வீரத்தின் விளைநிலம் பிரபாகரனை ஈன்ற பார்வதி அன்னையை மனிதநேயமின்றி விமான நிலையத்தில் பாதம் பதிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய இந்திய அரசின் வன்கொடுமைக்கு எதிர்ப்புக்குரல் எழுப்பாதது ஏன் கலைஞரே? பதவி நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்ள சோனியா காந்தி என்னும் ‘சொக்கத் தங்கத்தின்’ கருணைப் பார்வைக்கு இவ்வளவு தூரம் முதுகு வளைந்திருக்க வேண்டுமா முத்தமிழறிஞரே!
கலைஞரே… கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் இரண்டு முறை மட்டும் புதுடெல்லிக்குப் புறப்பட்டீர்கள். பிரபாகரன் சடலம் என்று ஒரு சடலத்தை ஊடகங்கள் ஓயாமல் காட்டிக் கொண்டிருந்தபோது, உலகத் தமிழர்கள் செய்வதறியாது சோகம் கனக்க விழிநீர் வெள்ளமாய்ப் பெருக்கியபோது, தள்ளு வண்டியில் அமர்ந்தபடி சோனியாவிடம் உங்கள் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் அமைச்சர் பதவி கேட்டு அலைக்கழிந்தீர்கள்.
அதற்குப் பின்பு ஆயிரம் பிரச்னைகள் தமிழகத்தில் அரங்கேறின. ராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரை அன்றாடம் மீனவர்கள் சிங்களரால் வேட்டையாடப் பட்டனர். இன்று வரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீங்கள் கைநோக மன்மோகன்சிங் அரசுக்குக் கடிதம் எழுதிக் கடமையாற்றினீர்கள்.
இப்போது இரண்டாவது முறையாக முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும் போர்வையில் புதுடெல்லி சென்று ஆ.ராசாவைக் காக்கவும், காங்கிரஸ் கூட்டணி நிலைக்கவும் அரும்பாடு பட்டீர்கள். உங்கள் கொள்கைப் பிடிப்பு, நினைக்கும்போதே நெஞ்சமெல்லாம் சிலிர்க்கச் செய்கிறது கலைஞரே!
‘எந்தப் பதவியானாலும், எந்த மட்டத்திலானாலும் அதனைத் தேடிப்போய் நெருக்கடி கொடுத்துப் பெற முனையும்போதோ, அல்லது பெற்றுவிட்ட பிறகோ, உன்னைப் பற்றி உனக்கே ஒரு வெறுப்பு தோன்றும், உனக்குத் தோன்றுகிறதோ இல்லையோ, நாட்டுக்குத் தோன்றும்’ (கலைஞர் கடிதம் – தொகுதி 1) என்று உடன்பிறப்புக்கு எவ்வளவு தெளிவாக 9-11-68-ல் நீங்கள் கடிதம் தீட்டியிருக்கிறீர்கள்!
அவ்வளவும் சத்திய வார்த்தைகள். இன்று உங்களைப் பற்றி நாட்டுக்கு அப்படித்தான் தோன்றிவிட்டது. ‘வாண்டையார், வடபாதி மங்கலத்தார், நெடும்பலத்தார், குன்னியூரார், மூப்பனார், மன்றாடியார், பேட்டையார், பெரும்பண்ணையார், செட்டி நாட்டார், சிவகங்கை சீமையார்’ என்று அண்ணா அன்று மேடைதோறும் காங்கிரஸில் இருந்த பணக்காரர்களைப் பட்டியலிட்டார்;
சென்னையில் 1951 டிசம்பரில் நடைபெற்ற தி.மு.க. முதல் மாநில மாநாட்டில், ‘தமிழகத்தில் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.கழகம்தான்’ என்று பிரகடனம் செய்தார். நீங்களும் பல்வேறு தருணங்களில் ‘நானும் ஒரு கம்யூனிஸ்ட்’ என்று ‘நகைச்சுவை’ ததும்பப் பேசியிருக்கிறீர்கள். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குபேரபுரியின் வாரிசுகளாக விண்ணிலும் மண்ணிலும் வலம் வருகின்றனர். இந்த ரசவாத மாற்றம் எப்படி நிகழ்ந்தது கலைஞரே!
நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடைபாதை மனிதர்களாக இருந்த உங்கள் அமைச்சர்களும், தானைத் தளகர்த்தர்களும் தமிழகத்து அம்பானிகளாய் உருமாறிய ரகசியத்தை உருக்குலைந்து நிற்கும் எந்தமிழர் அனைவருக்கும் நீங்கள் சொல்லிக் கொடுத்து விட்டால் இலவசங்களுக்கே இடமிருக்காது கலைஞரே!
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா சிக்கிச் சிறைப்பட்டதும், சி.பி.ஐ. கரங்கள் கலைஞர் தொலைக்காட்சி வரை விரிந்ததும் உங்கள் அம்பறாத் தூணியில் தூங்கிக் கொண்டிருந்த ஆரிய – திராவிட அம்பெடுத்து வீசி விட்டீர்கள். காமராஜரின் வேட்பாளராக சஞ்சீவரெட்டியும், இந்திராவின் வேட்பாளராக வி.வி.கிரியும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நின்றபோது நீங்கள் வி.வி.கிரியைத்தானே வெற்றி பெறச் செய்தீர்கள்.
இந்திராவும், கிரியும் உங்கள் வார்த்தையில் ஆரியர்; காமராஜரும், சஞ்சீவரெட்டியும் திராவிடர். அப்போது எங்கே போனது உங்கள் இனமான உணர்வு? ‘இராமன் இரு பேச்சாளன் இல்லை’ என்பான் வான்மீகி. இரு பேச்சு இல்லாமல் நீங்கள் இல்லை என்பதுதானே உண்மை கலைஞரே!
ஆறாவது முறை நீங்கள் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறீர்கள். நல்லது. ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன சாதித்தீர்கள்? மாநில சுயாட்சி வாங்கிக் கொடுத்து விட்டீர்களா? தமிழை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கி விட்டீர்களா? உங்களால் ஊழல் வழக்குகளுக்குள்ளான கண்ணப்பன், செல்வகணபதி, இந்திரகுமாரி, ரகுபதி, முத்துசாமி போன்றவர்களைக் கழகத்தில் சேர்க்காமல் அரசியல் ஆரோக்கியம் காத்தீர்களா?
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு மேலவையைக் கொண்டுவர நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் பத்தில் ஒரு பங்காவது தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்க முனைந்தீர்களா? நிர்வாக மொழியாகத் தமிழை நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தி விட்டீர்களா? ‘உணவு, உடை, குடியிருப்பிடம் எனும் மூன்று அடிப்படைத் தேவைகளைக்கூட 17 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும் நிறைவேற்றிக் கொடுத்திட இயலாத காங்கிரஸ் ஏன் ஆட்சியில் நீடிக்க வேண்டும்?’ என்று கேட்டார் அண்ணா… அதையே உங்களிடம் நாங்கள் கேட்கிறோம். ஊழலற்ற ஆட்சிக்கும் உங்களுக்கும் என்றாவது தொடர்பிருந்ததுண்டா?
ஈழத் தமிழர் நலன் காக்கத் தவறிய நீங்கள் ஆட்சியில் நீடிப்பதால், உலகத் தமிழருக்கு என்ன நன்மை? தாயக மீனவர் மீது நடக்கும் தாக்குதலைத் தடுக்க முடியாததும் உண்மை தானே! வீதிக்கு வீதி மதுக்கடை திறந்து ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழை மக்களை மயக்கி வாங்கி, இலவச நாடகம் நடத்தி அதே மக்களிடம் பிச்சைக்கார மனோபாவத்தை வளர்க்கும் உங்களுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான மகளிர் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா?
நீங்களும், உங்கள் வாரிசுகளும், கழக உடன்பிறப்புகளும் அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைக்கவும், சொத்துகளை எல்லையின்றிக் குவிக்கவும், மணற் கொள்ளையிலிருந்து அரிசிக் கடத்தல் வரை அமோகமாக நடத்தவும் ‘திருமங்கலம் ஃபார்முலா’வை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். எந்தப் பணத்தை நம்புகிறீர்களோ அது தான் உங்கள் காலையும் வாரப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்!
இப்படிக்கு,
ஐந்தாவது முறையாவாது நல்லாட்சி தருவீர்கள் என்று நம்பி ஏமாந்த,
தமிழருவி மணியன்
நன்றி adrasaka.blogspot.com
Thursday, March 3, 2011
பொறியாளர்கள் பணிக்காக நேந்து விடப்படுகிறார்கள்
விடிகாலை விழித்து, வெந்நீரில் குளித்து,
வேகாத உணவினை விரும்பாமல் புசித்து,
வாகன நெரிசலில் சாரலில் நனைந்து,
வேண்டா வெறுப்புடன் தொடங்குகிறது அந்நாள்.
புரியாத மொழி பேசும் கணினியை முறைத்து,
பிழையான வேலைக்காய் தன்மானம் தொலைத்து,
உறவுகள் மறந்து உழைப்பதன் பலன்
மூக்குக்கண்ணாடியும், கொஞ்சம் முதுகு வலியும்.
பணி நிமித்தமாய் வெளிநாடு சென்ற நண்பன்
புதுப்புது இடங்களில் விதவிதமாய் ஃபேஸ்புக்கில் சிரிக்க, பெங்களுரைத்/chennai தாண்டாத விரக்திகள்எரிச்சலைக் கிளப்புகிறது.
சென்னை வெயிலின் திடீர் மழையைப் போல
சென்ற வாரம் பணியில் சேர்ந்த தேவதைக்கு
காதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே
பளிச்சென எறிந்த பல்புகள் அணைகிறது.
பாசமாக பேசும், பணிச்சுமை திணிக்கும்,
உயர்வாகப் பேசி குறைவாக மதிப்பிடும்,
அன்பான மேலாளரிடம் கேட்க தோன்றுகிறது
"நீங்க நல்லவரா? கெட்டவரா ?".
அலுவலக அரசியல் புரியாமல் விழித்து,
அறிவுக்கெட்டா தர்க்கங்களில் 'புரிந்தது' போல நடித்து, வீட்டிற்கு செல்வதற்குள் "செல்லமே" கூட முடிந்துவிடுகிறது.
செம்மறி ஆடுகள் பலிக்காக நேந்து விடப்படுகின்றன.
பொறியாளர்கள் பணிக்காக நேந்து விடப்படுகிறார்கள்.
வேகாத உணவினை விரும்பாமல் புசித்து,
வாகன நெரிசலில் சாரலில் நனைந்து,
வேண்டா வெறுப்புடன் தொடங்குகிறது அந்நாள்.
புரியாத மொழி பேசும் கணினியை முறைத்து,
பிழையான வேலைக்காய் தன்மானம் தொலைத்து,
உறவுகள் மறந்து உழைப்பதன் பலன்
மூக்குக்கண்ணாடியும், கொஞ்சம் முதுகு வலியும்.
பணி நிமித்தமாய் வெளிநாடு சென்ற நண்பன்
புதுப்புது இடங்களில் விதவிதமாய் ஃபேஸ்புக்கில் சிரிக்க, பெங்களுரைத்/chennai தாண்டாத விரக்திகள்எரிச்சலைக் கிளப்புகிறது.
சென்னை வெயிலின் திடீர் மழையைப் போல
சென்ற வாரம் பணியில் சேர்ந்த தேவதைக்கு
காதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே
பளிச்சென எறிந்த பல்புகள் அணைகிறது.
பாசமாக பேசும், பணிச்சுமை திணிக்கும்,
உயர்வாகப் பேசி குறைவாக மதிப்பிடும்,
அன்பான மேலாளரிடம் கேட்க தோன்றுகிறது
"நீங்க நல்லவரா? கெட்டவரா ?".
அலுவலக அரசியல் புரியாமல் விழித்து,
அறிவுக்கெட்டா தர்க்கங்களில் 'புரிந்தது' போல நடித்து, வீட்டிற்கு செல்வதற்குள் "செல்லமே" கூட முடிந்துவிடுகிறது.
செம்மறி ஆடுகள் பலிக்காக நேந்து விடப்படுகின்றன.
பொறியாளர்கள் பணிக்காக நேந்து விடப்படுகிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)

